RSS

அண்ணல் பெருமான் இல்லம் வந்தால்

14 Oct

நாகூர் கவிஞர் Z.ஜபருல்லா எந்த ஒரு கவிதை நூலும் எழுதவில்லை என்ற ஒரு குறை இதுவரை .என் மனதில் ஏக்கமாய் ஆக்கிரமித்துள்ளது. அற்புதமான சிந்தனையும், அபார கற்பனை வளமும், அசாத்திய துணிச்சலும் கொண்ட ஒரு கவிஞனின் திறமை ‘விழலுக்கு இறைத்த நீராய்’ வீண்விரயம் ஆகிறதே என்று நான் நினைத்துப் பார்த்து வருந்தியதுண்டு.

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அவருடைய பேச்சை அலசும்போது, மனிதர் நம்மை புகழ்கிறாரா அல்லது காலை வருகிறாரா என்பதே நமக்கு புரியாது.

சோம்பேறித்தனம் என்பது கலைஞர்களுக்கே உரித்தான குணமோ என்னவோ எனக்குத் தெரியாது. அந்தக் குணம் மாத்திரம் அவருக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாகூருக்கு ஒரு வைரமுத்துவோ, மு.மேத்தாவோ, நா.காமராசனோ கிடைத்திருக்கக்கூடும்.

மனிதனுக்கு எத்தனையோ விதமான கற்பனைகள் வரக்கூடும். கனவிலே பில்கேட்ஸை பேட்டி காண்பவர்கள் உண்டு; அனுஷ்காவோடு டூயட் பாடுபவர்கள் உண்டு, தூங்கி முழிப்பதற்குள் உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப் பார்த்து திரும்பி வருபவர்கள் உண்டு.

கற்பனை என்பது சுவராஸ்யமானது. கற்பனை இல்லாத மனிதனே கிடையாது. “லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்” என்று சொன்ன டாக்டர் அப்துல் கலாமின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

வாழ்க்கையில் கற்பனையை சுவராஸ்யமாக சேர்த்துக் கொள்பவர்கள் உண்டு. வாழ்க்கையையே வெறும் கற்பனை ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு.

கவிஞர் ஜபருல்லாவிற்கு ஒரு அற்புதமான கற்பனை பிறக்கிறது. 1400 ஆண்டுகட்கு முன்னர் பிறந்த ஓர் அற்புத மனிதரை காண நாம் கொடுத்து வைக்கவில்லை. இறைத்தூதரை நேரில் கண்ட அக்கண்கள் எப்பேர்ப்பட்ட பேறு பெற்ற கண்கள். அண்ணலாரின் திண்ணைத் தோழர்களைத்தான் சொல்கிறேன்

அண்ணலாரை நேரிலோ அல்லது கனவிலோ காண்பதாய் கற்பனைச் செய்து பார்க்கிறார் நம் கவிஞர். அதுவும் எப்படி? அண்ணல் நபியவர்கள் இவருடைய வீட்டிற்கே வருகிறார்களாம். கற்பனைதான் என்றாலும், என்ன ஒரு சுவராஸ்யமான கற்பனை!.

இஸ்லாமியப் பாடகர் இறையன்பன் ஹசன் குத்தூசின் கம்பீரமான குரலில் நீங்களே இதை கேட்டுப் பாருங்கள்:

அண்ணல் பெருமான்
என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்பேன்?

அஸ்ஸலாமு அலைக்கும்
முகமன் கூறி
ஆரத்தழுவ விரைவேனா?

ஸலவாத்தை என்
நெஞ்சில் நிறைத்து
சத்தத்துடனே ஒலிப்பேனா?

களிப்பின் கடலில்
ஆழ அமிழ்ந்து
கண்ணீர் வழியப் பார்ப்பேனா?

கண்களில் வெளிச்சம்
அதிகம் ஆகி
காணமுடியாமல் அழுவேனா?

வாழ்த்திக் கவிதை
பாட நினைத்தும்
வார்த்தை வராமல் தவிப்பேனா?

வார்த்தைகள் கோடி
வலமாய் வந்தும்
நா எழும்பாமல் திகைப்பேனா?

சிந்தனை இழந்து
செயல்பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா?

உணர்ச்சிகள் மீறி
உயிர்நிலை மாறி
தரையில் விழுந்து சரிவேனா?

கற்பனையே எனக்கு
இப்படி ஆனால்
காட்சி நிகழ்ந்தால் என்னாகும்?

ஒன்றும் புரியவில்லை
எனினும் – என்
உணர்வுகள் மடியவில்லை!

 

Tags: , , ,

One response to “அண்ணல் பெருமான் இல்லம் வந்தால்

  1. Sadayan Sabu

    October 14, 2012 at 3:48 pm

    ‘z ‘class touch

     

Leave a comment