RSS

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)

11 Nov

நாகூர் ஹனிபாவை கட்சியின் கொள்கைப் பாடல்களைப் பாடும் வெறும் ஒரு கட்சிப்பாடகராக மட்டும் கருத முடியாது. கட்சித் தலைமையுடன் அன்றிலிருந்தே அவருக்கிருந்த ஆளுமை மிகஅதிகம். கட்சித் தலைமைக்கும் அவரது அருமை பெருமை நன்றாகவே தெரியும்.

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பிறகாவது நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி அளித்து தகுந்த மரியாதை செய்திருக்கலாம். ஆனால் ஏனோ கலைஞர் அவர்களுக்கு அந்த நட்புணர்வு இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியம்.

கலைஞர் அவர்கள் தாராள மனது பண்ணி கட்சியில் நாகூர் ஹனிபாவுக்கு ஒரே ஒரு புரொமோஷன் கொடுத்தார். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆமாம். அவரை பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து உயர்த்தி செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை மனமிறங்கி அளித்தார்.

சமநிலைச் சமுதாயத்தில் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி மிகவும் நியாயமானதாக நம் மனதுக்குப் படுகிறது.

“தி.மு.க. சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. அண்ணா, அதன் தலைவராக இருந்தபோது, பொருளாளராக சாதிக் பாட்சா இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவிற்குப் பிறகு அப்பதவி சமூகநீதி அடிப்படையில் முஸ்லீம் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.

அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயளாளர் பொறுப்பை உட்கட்சிப் பூசலின் காரணமாக பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த இடத்திற்கு உடனடியாக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அதே தலித் சமூகத்திலிருந்தே இன்னொருவரைத் தேர்வு செய்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது தி.மு.க. ஆனால் இந்த அளவுகோல் ஏன் கழகத்தில் உள்ள முஸ்லீம்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நம் கேள்வி?”

என்ற வாதத்தை நம் முன் வைக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். மிகவும் நியாயமான கேள்வி.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்த தங்களுக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, பதவிகளை கேட்டுப் பெற்று, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டபோது, சுயமரியாதைக்காரரான நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாததாலேயே அவரை நாம் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று அழைக்க வேண்டியதுள்ளது.

ஓடி வருகிறான் உதயசூரியன்

நாகூர் ஹனிபா இதுவரை பாடியிருக்கின்ற கட்சியின் கொள்கைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றுப் பின்னணியில் பல சுவையான நிகழ்வுகள் மறைந்திருப்பதுண்டு. திமுகவின் தொடக்க காலத்தில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கட்சியின் தலைமைக்கு நாகூர் ஹனிபா என்ற பிரபலத்தின் காந்தக்குரல்தான் தேவைப்பட்டது.

ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆஸ்தான பிரச்சார பீரங்கியாய் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திமுகவிற்கு இரண்டு பிரபலங்கள் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். ஒன்று மக்கள் கலைஞர் எம்.ஜி.ஆர். அவர்கள். மற்றொருவர் மக்கள் பாடகர் நாகூர் ஹனிபா.

“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்று நாகூர் ஹனிபாவின் குரல் தெருக்கோடியின் ஒலிபெருக்கியில் அதிரடியாய் ஒலிக்கையில் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேற கட்சித்தொண்டன் மகுடி ஊதிய பாம்பாய் கட்டுண்டு படையெடுத்துப் போவான்.

இன்னொருபுறம், “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று படங்களில் எம்.ஜி.ஆர். வாயசைத்துப்பாடி உதயசூரியன் சின்னத்தை மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது “வேறுதுவும் வேண்டாம். தொகுதிகளில் வெறுமனே எம்.ஜி.ஆர் தன் முகத்தை காட்டினாலே போதும். ஜெயித்து விடலாம்” என்பார் அறிஞர் அண்ணா. பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி,ஆர். பிரச்சாரத்திற்கு போக இயலாதிருந்த நேரத்தில் வெறுமனே அவரது ‘கட்-அவுட்’டை காண்பித்தே அவரை ஜெயிக்க வைத்தார்கள் திமுக தொண்டர்கள்.

அதே போன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகூர் ஹனிபா நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. அவருடைய வெண்கலக் குரல் முழங்கும் இசைத்தட்டு அல்லது கேசட் போதும். ஆயிரமாயிரம் ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வர.

அழைக்கின்றார் அண்ணா

இன்று எங்கு நோக்கினாலும் தலைவர்களின் ஆளுயர கட்-அவுட்களை வைத்து “மருத்துவர் ஐயா அழைக்கிறார்” “கேப்டன் அழைக்கிறார்” “திருமா அழைக்கிறார்” “வைகோ அழைக்கிறார்” என்ற வாசகத்தைப் பொறிக்கிறார்கள். இந்த மோகஅலை (Trend) அமோகமாக பரவுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையாகாது.

“1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில் வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் வேண்டினார் ஹனிபா. அதை மறுத்த அந்த நிறுவனம், ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னது. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என்று மறுத்து, பின்னர் வென்றார் ஹனிபா. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”

என்று குமுதம் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகருக்கு அளித்த பதில் ஒன்றில் சுவையான தகவலைப் பரிமாறுகிறார் அரசு.

மற்ற பாடல்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புக்கள் இந்த பாட்டுக்கு உண்டு.

“திருவாடுதுறை இராசரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ஹனிபாவுக்கு இந்தப் பாடல்” என்று சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர்.

“‘அழைக்கின்றார் அண்ணா’ என்று ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால், திராவிட நாடு பெற்று விடுவேன்”

என அடிக்கடி குறிப்பிடுவாராம், அண்ணா என்று சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012) இதழில் குறிப்பிடுகிறார் ஆளுர் ஷாநவாஸ்.

கட்சியில் அனிபாவிற்கு இருந்த ஆளுமைக்கு இதைவிட வேறு ஒரு நற்சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.

திண்ணை இதழில் நானெழுதிய ஹனிபாவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து விட்டு அதே இதழில் திரு. மலர் மன்னன் அவர்கள்

“அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்”

என்று நான் எழுத மறந்ததை குறைப்பட்டு எழுதியிருந்தார்.

திரைப்படத்தில் முதல் சீனில் கதாநாயகனை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் ஒரு யுக்தியை பயன் படுத்துவார் படத்தின் இயக்குனர். இந்த யுக்தி இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. கதாநாயகன் ஒரு காரில் வந்து இறங்குவதாக இருந்தால் முதலில் காரின் டயரைக் காட்டுவார்கள். பிறகு காரின் கதவுகள் திறக்கப்பட்டு கதாநாயகனின் “Entry”-யை, அவரது காலணியிலிருந்து காமிரா Focus செய்யப்பட்டு கடைசியில்தான் முகம் காட்டுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரில் கரகோஷமும் விசில் சத்தமும் கூரையைப் பிளக்கும். இதே பாணியைத்தான் திமுகவினர் கையாண்டனர்.

1960களில் அறிஞர் அண்ணா கலந்துக் கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பலவிதமான யுக்திகள் கையாளப்படும். விழா மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியிருப்பார்கள். சிறுவர் முதல் பெரியோர் மட்டுமின்றி தாய்க்குலங்களும் தத்தம் குழந்தைகளுடன் அணிஅணியாகத் திரண்டிருப்பார்கள். அலங்கார வளைவும், வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், அந்த கூட்டத்திடலை விழாக்கோலம் காணச் செய்யும். மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டு இரவு 10-மணி வரை நேரத்தை இழுத்தடிப்பார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் அறிவிக்கப்படும் கமெண்டரி போன்று “அண்ணா புறப்பட்டுவிட்டார்” “அண்ணா வருகிறார்” “அண்ணா வந்துக்கொண்டே இருக்கிறார்”. “அண்ணா இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார்” “அண்ணா இதோ வந்து விட்டார்” என்று அவ்வப்போது அறிவிப்பு செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதத்தை உண்டாக்குவார்கள். மாலையில் வந்து பேசவேண்டிய ஒரு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வருகிறார் அறிஞர் அண்ணா. “மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை” என்று பேச்சைத் தொடங்கியதும் சோர்வடைந்திருந்த பொதுமக்களுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் பீறிட்டிக்கொண்டு வந்ததோ தெரியவில்லை; கைத்தட்டல் வானை முட்டியது. இதே பாணியை பின்பற்றி கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவிஞர் கண்ணதாசன் “சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்று வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார் என்பது நினைவில் நிற்கும் நிகழ்வு.

திமுக காரர்கள் மக்களை எதிர்ப்பார்ப்பின் நுனியில் இருக்க வைத்து அவர்களைப் பரவசப் படுத்துவதை ஒரு கலையாகவே கற்றிருந்தார்கள். ஆர்வக்களை சொட்டும் முகங்களை அதிசயிக்க வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு கைவந்தக் கலையாக இருந்தது.

அண்ணா வந்த பிறகும் மேடையில் உடனே ஏறி மைக்கை பிடித்து விடமாட்டார். மேடைக்குப் பின் நின்று அவர் மூக்குப்பொடி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் நாகூர் ஹனிபாவை மேடை ஏற்றுவார்கள். ஹனிபா மேடை ஏறியதுமே கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். ஹனிபாவின் ஆஜானுபாகுவான உயரம், மிடுக்கான தோற்றம், கணீரென்ற குரல் இவைகள் அவர்மீது காந்தசக்தி போன்ற ஓர் ஈர்ப்பை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியது.

பொதுமக்கள் ஆர்வமிகுதியால் எதிர்பார்ப்பின் உச்சகட்ட நிலைக்கு எட்டியிருப்பார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்று அந்த சிம்மக்குரலோன் ராகமெடுத்து பாடலை கர்ஜிக்கையில் மெய்மறந்து போவார்கள் கூட்டத்தினர். பாடல் முடியும் தறுவாயில் ஒரு அட்டகாசமான Entry கொடுப்பார் அறிஞர் அண்ணா. பொதுமக்கள் அடையும் பரவசநிலையை சொல்லவா வேண்டும்? காமிராக்கள் மின்னலாய் பளிச்சிட ‘கிளிக், கிளிக்‘ என்ற சப்தம் தொடர்ச்சியாய் கேட்கும். பெரும் பரபரப்புக்கிடையே ‘அண்ணா வாழ்க’ ‘அண்ணா வாழ்க’ என்ற முழக்கம் இடைவிடாது ஒலிக்கும். அதற்குப் பிறகுதான் அண்ணா பேசத் தொடங்குவார்.

“நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்” என்று நாகூர் ஹனிபாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக அன்றிலிருந்து இன்றுவரை நாகூர் ஹனிபா ஒரு பகடைக்காயாக, பலிகடாவாக, பரிசோதனை எலியாக, கறிவேப்பிலையாகவே திமுகவிற்கு பயன்பட்டு வந்தார் என்பதில் நன்றாகவே நமக்கு விளங்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா

19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.

அச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார். இனி சற்று காலத்திற்கு ம.தி.மு.க.வின் மேடைகளில் மறுபடியும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.

நாகூர் ஹனிபாவை வெறும் ஒரு பாடகனாக மட்டும் தராசில் வைத்து தரம் பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். அவருடைய இடத்தை நிரப்ப இன்னொருவர் அவ்வளவு சீக்கிரம் வருவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு கிண்டல்

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அக்கட்சியை கிண்டல் செய்து ஒரு பாடலைப் பாடினார் நாகூர் ஹனிபா.

“கீழே இறங்கு..
மக்கள் குரலுக்கு இறங்கு.
ஆண்டது போதும்.
மக்கள் மாண்டது போதும்”

என்ற பாடல் வரிகள் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கியது. மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைவிட வார்த்தைகளாலே ‘சுருக்’கென்று காங்கிரஸ்காரர்களின் நெஞ்சங்களை தைத்த பாடல் ஒன்று உண்டு.

“சோறு போடாத சோம்பேறியே!
பதவி நாற்காலி உனக்கொரு கேடா?
ஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட,
இது உன் பாட்டன் வீடா?”

என்ற பாடல்தான் அது. இந்த இருபாடல்களை எழுதியதும் நாகூர் சலீம்தான். “எலிக்கறியைத் தின்னச் சொன்ன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?” என்ற தெரு வாசகங்களும், இந்தப் பாடலும்தான் காங்கிரஸ் கட்சியை அரியாசனத்திலிருந்து கீழே இறக்க உதவிய பயங்கர ஆயுதங்களாக இருந்தன என்றால் அது மிகையாகாது.

“வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது” என்றான் நெப்போலியன். ஹனிபாவின் பாடல்கள் பேனாமுனையைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.

(இன்னும் வரும்)

அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

 

Tags: , , ,

2 responses to “நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)

  1. Mohamed Ali Jinnah

    November 11, 2012 at 9:25 pm

    சுவையாக கட்டுரை .கசப்பான ஹனீபா அண்ணனின் வாழ்வின் நிகழ்வுகள் . நீங்கள் எழுதுவது அண்ணனுக்கு உடன்பாடா! என்பது தெரியவில்லை? அதனால் நான் தத்தளிக்கின்றேன். அண்ணன் மீது நான் வைத்திருக்கும் பாசம் உயர்வானது . அனைத்தும் நன்மைக்கே ,அண்ணனுக்கு இறைவன் அருள் உண்டு . அவரது சேவை சமூகத்திற்கு உயர்வானது.

     
  2. Abdul Qaiyum

    November 11, 2012 at 11:22 pm

    மதிப்பிற்குரிய இசைமுரசு அவர்கள் அன்று முதல் இன்றுவரை கலைஞர் அவர்களின் விசுவாசியாகவே இருந்து வருகிறார்கள். எனவே என் எழுத்துக்களில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவே முடியாது. என் மனதில் பட்டதை என்னால் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை.

     

Leave a comment