RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5

28 Oct
நாகூர் ரவீந்தர்

நாகூர் ரவீந்தர்

நாடகக்குழு கட்டுப்பாடு

எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்காக ரவீந்தர் எழுதிய நாடகங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து சக்கைபோடு போட்ட நாடகங்கள் இரண்டே இரண்டு. ஒன்று “இன்பக்கனவு”; மற்றொன்று  “அட்வகேட் அமரன்”. தமிழ்நாட்டிலுள்ள அத்தனை ஊர்களிலும் அரங்கேறி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது

தெருக்கூத்து, வள்ளித் திருமண நாடகம், கதாகாலேட்சபம்,  நூறு மசலா, நொண்டி நாடகம் மற்றும் ராஜா ராணி கதைகளைக் கொண்ட தூய தமிழ்   வீரவசனங்கள், அடுக்குமொழி வார்த்தை ஜாலங்கள் கொண்ட நாடகங்களையும் கண்டு அலுத்துப்போயிருந்த மக்களுக்கு நாள்தோறும் தாங்கள் பேசும் நடைமுறை பேச்சு வழக்குமொழியில் வடிக்கப்பட்ட சமூக நாடகங்கள் மக்களிடையே பேராதரவைப் பெற்றன.

அதுவும் கனவுக்காட்சிகள் முதற்கொண்டு சண்டைக் காட்சிகள் வரை அத்தனை ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடகங்கள் என்றால் ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்தைக் கூறவா வேண்டும்?

நாடக மன்றத்தை ஒரு ராணுவக் கட்டுப்பாடு போன்றே எம்.ஜி.ஆர். வைத்திருந்தார். கலைஞர்களின் ஒழுக்கம் மிக முக்கியம் என அவர் கருதினார். ஊர் விட்டு ஊர் பயணிக்கும் கலைஞர்கள் ஏடாகூடமாக எதாவது பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் அது தன்னுடைய ‘இமேஜை’ பெருமளவு பாதிக்கும் என்பது அவருக்குத் தெரியும். ‘அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும்’ என்ற ரீதியில் அவரது எதிரிகள் கண்கொத்திப் பாம்பாக அவரை நோட்டமிட்ட வண்ணம் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். எந்தெந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ   அங்கெல்லாம் நாடகக்குழு தங்குவதற்கு வசதியாக தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அனாவசியமாக எந்த ஒரு நடிகரும், எந்த ஒரு நடிகையையும் பார்த்துப் பேசி விட முடியாது. அப்படியொரு கட்டுக்கோப்பாக  அவர் வைத்திருந்தார். .

இரவு நேரங்களில் வெளியாட்களால் தொந்தரவு நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். ரோந்து வருவார். கழுத்தில் மப்ளரும் கையில் டார்ச் லைட்டும் ஏந்திய வண்ணம் தூங்காமல் கூர்க்காவைப்போன்று சுற்றிச் சுற்றி வருவார். சில சமயம் வீட்டினுள்ளேயும் டார்ச்லைட் வெளிச்சம் வந்து விழும். அதே போன்று கலைஞர்களும் அவருக்கு பயந்து சீரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் சிறப்பான அம்சம் எதுவென்றால் அங்கு வழங்கப்படும் சாப்பாடு. தரமான, சுவையான உணவு தன் சகாக்களுக்கு பரிமாறப்படவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக இருந்தார். அவருக்கு எப்படி தயார் செய்யப்படுகிறதோ அதேபோன்றுதான் பிற கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது.

நாடகக் கம்பேனியுடன் ஒருமுறை எம்.ஜி.ஆர் பர்மா சென்று வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து ஒருமுறை அழைப்பு வந்தது.  ஆனால் அச்சமயம்  இலங்கை போய்வர சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை.

ரவீந்தர் – சில நினைவுகள்

ரவீந்தரை கதாசிரியர் என்ற அந்தஸ்த்தில்தான் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் பணிக்கு அமர்ந்தார். மதிக்கத்தக்க உத்தியோகம். எம்.ஜி.ஆருடன் நேரடி தொடர்பில் எப்போதும் இருந்தார். “காக்கா பிடிப்பது”, “ஜால்ரா போடுவது”, “ஒத்து ஊதுவது” போன்ற வித்தையில் ரவீந்தர் தேர்ச்சி பெறாமல் போனதால்தான் அவரால் ஆர்.எம்.வீரப்பன் போன்று உச்சநிலைக்கு வர முடியவில்லை.

அக்காலத்தில் ரவீந்தரோடு பழகிய அத்தனைபேர்களும் “ரவீந்தரைப் போன்று ஒரு எளிமையான மனிதரை நாங்கள் இதுவரைக் கண்டதில்லை” என்றுதான் ஒருமித்தக் கருத்தாக கூறுகிறார்களேத் தவிர யாரும் அவரது குணநலன்களை குறைத்து மதிப்பிட்டதில்லை..

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலத்தில் ரவீந்தரை ஓர் உற்ற நண்பனாகவும், ஆலோசகராகவும்தான் மதித்து நடத்தினாரேயொழிய  ஒருபோதும் அவரை வேலையாளாகக் கருதியதில்லை. எந்த நேரத்திலும் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியது கிடையாது.ஒருமுறை இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் காண்பதற்கு எம்.ஜி.ஆர். செல்கையில் ரவீந்தரைத்தான் தன்னுடன் அழைத்துச் சென்றார்,

ஏற்கனவே குறிப்பட்டதைப்போன்று எம்.ஜி.ஆரை  முன்அனுமதியின்றி எந்த நேரத்திலும் அவரது வீட்டில்  நேராக போய்ச் சந்திக்கும் உரிமை அவருக்கு தரப்பட்டிருந்தது. காவலாளர்கள் முதல் மெய்க்காப்பாளர்கள்வரை ரவீந்தருக்கு உரிய மரியாதைத் தந்து மதித்தார்கள். அவ்வளவு நெருக்கமாக இருந்த ரவீந்தர் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டார் என்பதை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விவரமாகக் காண்போம்.

ரவீந்தர் சினிமாத்துறையில் அத்தனை பெரும்புள்ளிகளோடும் பரஸ்பர நட்பு கொண்டிருந்தார். விஜயா-வாகினி ஸ்டூடியோ அதிபர் பொம்மிரெட்டி நாகிரெட்டி ரவீந்தர்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். “பொம்மை” சினிமா இதழில் எம்.ஜி.ஆருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொடராக ரவீந்தர் எழுதிவந்தார். அவரை எழுதியதற்குத் தூண்டியதே நாகிரெட்டிதான். எத்தனையோ எழுத்தாளர்கள் எம்.ஜி.ஆரைப்பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதியிருந்த போதிலும், வெளியுலகத்திற்குத்தெரியாத எம்.ஜி.ஆரின் அபூர்வ குணநலன்களையும், கொடைத்தன்மையும், பெருந்தன்மையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ரவீந்தர் மட்டுமே.

எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டு பிராண்டு “காஸ்மெட்டிக்ஸ்” மேக்அப் சாதனங்கள் வினியோகித்து வந்த நாகூரைச் சேர்ந்த ஹமீத் ஹம்ஸா என்பவருடன் அண்மையில் தொலைபேசியில் உரையாட நேர்ந்தது. ஒருகாலத்தில் வெளிநாட்டுச் சாதனங்கள் வாங்கவோ, தருவிக்கவோ கொள்முதல் செய்ய வேண்டுமெனில் திரைப்படத் துறையினர் நாகூரைத்தான் நாடுவார்கள்.

நாகையிலிருந்து மலேஷியா, சிங்கப்பூருக்கு எஸ்.எஸ்.ரஜுலா அதன் பின்னர் எம்.வி.சிதம்பரம் போன்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல்கள் நடைமுறையில் இருந்தன.  நாகூரில் வெளிநாட்டு சாதனங்கள் விற்பனை உச்சத்திலிருந்த இருந்த நேரமது. இப்பொழுது கிடைப்பதுபோல் வெளிநாட்டுப் பொருட்கள் சர்வசாதாரணமாக அங்காடியில் கிடைக்காது. [கஸ்டம்ஸ்காரர்களைக் கண்டு விட்டால் கடைக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை அள்ளி கக்கத்தில் வைத்துக்கொண்டு பின்னங்கால் பிடரியில்பட தலைதெறிக்க ஓடுவார்கள்.]

முதன்முறையாக ஹமீது ஹம்ஸா வியாபார நிமித்தமாக எம்.ஜி.ஆரைக் காண  சென்னை சென்று, தன்னை நாகூர்க்காரர் என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது எம்.ஜி.ஆர். கேட்ட முதற்கேள்வி “உங்களுக்கு ரவீந்தரைத் தெரியுமா?” என்பதுதான். “நாடோடி மன்னன்” படம் வெளிவந்த சமயத்தில் அவர் நாகூர் கால்மாட்டுத் தெருவிலிருக்கும் ரவீந்தர் வீட்டுக்கு வந்து விருந்துண்டு போனதாக அவரே இவரிடம் கூறினாராம்.

எம்.ஜி.ஆர். வந்துப்போன விஷயம் நாகூர்க்காரர்கள் யாருக்குமே தெரியாது. தெரிந்தால் ஊரே அல்லோகலப்பட்டு அவரை மொய்த்திருப்பார்கள். என் இளமைக் காலத்தில் ரவீந்தர் நாகூர் வந்திருக்கிறார் என்று கேள்வியுற்றால் எங்கள் வீட்டுக்கு பின்புறமிருக்கும் அவரது வீட்டுவாசல் முன்பு நின்று சற்று நோட்டமிடுவேன். அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லா சிறுவர் சிறுமிகளும் எம்.ஜி.ஆரின் விசிறிகளாகவே  இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

வீட்டின் வாயிலில் அந்த பிரபல எழுத்தாளர் நின்றிருப்பார். அவரைச் சுற்றிலும்  ஒரு கூட்டம் சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும். இளமை தவழும் கவர்ச்சியான முகம். நடையில் ஒரு அசாத்திய வேகம். எம்.ஜி.ஆரின் அதே சுறுசுறுப்பு. தூரத்தே கல்மண்டபம் அருகே ஒரு லாந்தர் போஸ்ட் இருக்கும். அங்கே நின்று சற்று நேரம் வேடிக்கை பார்ப்பேன்.  எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான அவரைக் காணும்போது எம்.ஜி.ஆரையே பார்த்ததுபோன்ற ஓர்  உணர்வு ஏற்படும். மனநிறைவோடு ஒரு துள்ளலுடன் வீடுவந்து சேருவேன்.

என் பால்ய நண்பன் சாய்மரைக்கான் – ஒரு Interesting Character.  உதட்டைக் கோணலாக வைத்துக் கொண்டு, ஆட்காட்டி விரலை மூக்கின்மேல்  தடவி. மூக்கை உறிஞ்சி எம்.ஜி.ஆர். பேசும் மழலைத் தமிழில் அப்படியே பேசி நடித்துக் காண்பிப்பான். ரவீந்தரைப் பார்த்து வந்தபின்  மீண்டும் மீண்டும் சாய்மரைக்கானை எம்.ஜி.ஆர் போன்று மிமிக்ரி செய்ய வைத்து நண்பர்கள் நாங்கள் இரசித்து மகிழ்வோம்.

டாக்டரின் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் தொங்குவதைப்போல, தையற்காரரின் கழுத்தில் இஞ்ச்டேப் தொங்குவதைப்போல, எலக்ட்ரீசியன் சட்டைப்பையில் டெஸ்டர் காணப்படுவதைப்போல,  ஒன்றுக்கு மேற்பட்ட பேனாக்களை வரிசையாக சட்டைப்பையில் வைத்திருப்பார். எழுத்தாளனுக்கு எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கற்பனை சிறகடித்து வருமோ யாருக்குத் தெரியும்? உடனே குறித்து வைத்துக் கொள்வதற்காக இருக்கும் போலும்.

நாகூரில் இன்னொரு சினிமாவுலக பிரபலம் இருந்தார். அவர் பெயர் பரீது காக்கா. தற்காப்புக் கலையில் வல்லவர். ‘குஸ்தி’ கலையில் கைத்தேர்ந்தவர். ரவிச்சந்திரன் நடித்த “குமரிப்பெண்” (1966) போன்ற படங்களுக்கு அவர்தான் சண்டைப் பயிற்சி. அன்றைய ஸ்டண்ட் நடிகர்கள் பட்டியலில் நாகூர் பரீது அவர்களின் பெயர் முன்னணியில் இருந்தது. திரைப்படத்துறையில் மூத்த கலைஞர்கள் அத்தனைப்பேருக்கும் அவருடைய பெயர் ஞாபகத்தில் இருக்கும். அவர் சிறந்த நாடக நடிகரும் கூட. எம்.ஜி.ஆரின் நாடகங்களிலும் அவர் ஸ்டண்ட் வீரராக நடித்துள்ளார். “குலேபகவாலி” படத்தில் எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போடும் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு “டூப்”பாக நடித்ததும் இவர்தான்.

அரை டிராயர் அணிந்த சிறுவனாக இருந்த காலத்தில்  “உன்னை சினிமாவில் சேர்த்து விடுகிறேன். எங்கே நடித்துக் காண்பி” என்று என்னை உசுப்பிவிட,  (அவர் என்னை கலாய்க்கிறார் என்றே புரிந்துக் கொள்ளாமல்) நானும் என் இடுப்பு பெல்ட்டை கையில் உருவி எடுத்துக்கொண்டு  “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ”  என எம்.ஜி,.ஆர். நம்பியாரை சாட்டையால் விளாசித் தள்ளுவதைப் போல் நடித்துக்காட்ட அதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் “நாம் எவ்வளவு அப்பாவியாக அப்போது இருந்திருக்கிறோம்” என்று நினைக்கத் தோன்றுகிறது.

அட்வகேட் அமரன்

முந்தைய பதிவில் “இன்பக்கனவு” நாடகத்தைப் பற்றி ஆராய்ந்த நாம் இப்போது “அட்வகேட் அமரன்” நாடகத்தை சற்று அலசுவோம். அத்துடன், ஆரம்ப நாட்கள் முதற்கொண்டு எம்.ஜி.ஆரோடும் ரவீந்தரோடும் இணைந்து பணியாற்றி நாடகக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறிது அறிந்துக் கொள்வோம். “என்னுடன் இணைந்து பணியாற்றிய நாடகக் கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் நாடக மன்றத்தை சிறப்பாக நடத்தியிருக்க முடியாது” என எம்.ஜி.ஆரே  பத்திரிக்கை  பேட்டியொன்றில்   பெருமையோடு கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் நடத்திய நாடகங்களில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் தனித்தன்மை கூடிய பிரபலங்களாகத் திகழ்ந்தார்கள். ‘குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப ‘எம்.ஜி.ஆரின் நாடகத்தில் இவர் நடித்தார்’ என்ற தகுதியொன்றே திரைப்படத் துறையில் அவர்கள் நுழைவதற்கு போதுமானதாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் நாடகக் குழுவில் நடித்த ஏறக்குறைய அத்தனைக் கலைஞர்களும் பிற்காலத்தில் “கலைமாமணி” பட்டம், பொற்கிழி வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார்கள்.

Advocate Amaran - Nagore Mann vasanai

ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஏ.எஸ்.மணி, ஜி.சகுந்தலா, எம்.ஜி.ஆர்.

மேடை வடிவமைப்பு

“எக்ஸலெண்ட் மணி” என்று அழைக்கப்படும் அப்பன் ஐயங்கார் என்பவர்  நாடகத்திற்கான திரை மற்றும் அரங்க வடிவமைப்பு செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். அண்மையில் 2011-ஆம் ஆண்டு  நாரதகான சபா  அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் மேடை நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கத் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டார்.

எக்ஸலெண்ட் மணி

எக்ஸலெண்ட் மணி

நவாப் ராஜமணிக்கம் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு நாடகத்திரை வடிவமைப்பதில் திடீரென்று மோகம் ஏற்பட, ஆயில் பெயிண்ட் வரைகலையில்  நல்ல தேர்ச்சியும் பெற்று பாராட்டுக்கள் பெற்றார். மேடையில் அவரால் வடிவமைக்கப்படும் தூண்கள், மாடிப்படிக்கட்டு, விட்டம், கதவு, ஜன்னல் போன்றவை காண்பதற்கு தத்ரூபமாக இருக்கும். நீரியல் பொருந்துதல்கள் (Hydraulic Fittings) அறிமுகம் செய்து அக்காலத்தில் புரட்சி செய்தார்.

அரங்க வடிவமைப்புக்கு இப்பொழுது தோட்டாதரணி எப்படியோ அப்படி பிரமாண்டமான வடிவமைப்புக்கு எக்ஸலெண்ட் மணியைத்தான் நாடுவார்கள். தானெழுதும் நாடகங்கள் புதுமையாக இருக்க வேண்டும்.; அது எல்லோராலும் பரவலாக பேசப்படவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருந்தார்  ரவீந்தர். இயற்கையாகவே கற்பனைத்திறன் நிரம்பியவர் அவர். எக்ஸலெண்ட் மணியைப்பற்றி கேள்விப்பட்ட ரவீந்தர் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து ஆலோசித்து நாடகத்தின்  பிரமாண்டத்தை மேலும் மெருகேற்றி அதில் சுவையைக் கூட்டுவதற்காக சில புதுமையான காட்சிகளைச் சேர்த்தார். அதற்கு எக்ஸலெண்ட் மணியின் ஆலோசனையும் கற்பனை வளமும் பேருதவி புரிந்தன.

எம்.ஜி.ஆரின் “அட்வகேட் அமரன்” நாடகத்தில் மழை பெய்வது போன்று ஒரு காட்சி அமைத்திருந்தார் ரவீந்தர். கோவிந்தன் ஆசாரி என்பவரின் துணையோடு எக்ஸலெண்ட் மணி மிக மிக அற்புதமான முறையில் அரங்க வடிவமைப்பை அமைத்திருந்தார். மேடையிலேயே தத்ரூபமாக மழை பெய்யும் காட்சியைக் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போயினர்.

பிற்காலத்தில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அரங்கேற்றிய “இலங்கேஸ்வரன்”, “சாணக்கிய சபதம்”, “சூரபத்மன்”, “சிசுபாலன்”, “இந்திரஜித்”, “சுக்ராச்சாரியார்”, “நரகாசுரன்”, “திருநாவுக்கரசர்” போன்ற நாடகங்களில் அரங்க வடிவமைப்பு மற்றும் “ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்” இவைகளுக்காக செய்யப்பட்ட புதுமைகள் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.. இன்றும் அதுகுறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் “எக்ஸலெண்ட் மணி” ஒரு குறிப்பிடத்தக்க மனிதர்.

 பி.எஸ் சீதாலக்ஷ்மி

P.S.Seethalakshmi

எம்.ஜி.ஆர் நாடக மன்ற நாடகங்களில் நடித்த நடிகைளில் இன்னொரு  பிரபலம்  பி.எஸ்.சீதாலக்ஷ்மி. அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.. எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1951-ஆம் ஆண்டு தன் பெற்றோருடன் ராமநாதபுரத்திலிருந்து வந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலிருந்தே முத்துச்சாமி நாடாரின் நாடகக்குழு போன்றவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது.

சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். இவருடைய அலட்சியமான நடிப்பும், எடுப்பான குரலும் துடிப்பான பேச்சும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. லாயிட்ஸ் ரோட்டில்தான் பெரும்பான்மையான நாடக ஒத்திகைகள் நடைபெறும்.

சரியான நேரத்தில் ஒத்திகைக்கு வரவேண்டும். என்பதில் கண்டிப்பாக இருந்தார் எம்.ஜி.ஆர்.ஆர். யாராவது தாமதமாக வந்தால் பள்ளி வாத்தியார் போன்ற கண்டிப்புடன் கதவைச் சாத்தி விட்டு வெளியே கால்கடுக்க நிற்க வைத்து விடுவார். இதற்கு பயந்தே நாடகக் கலைஞர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். நேரம் தவறாமல் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி.

தான் பேச வேண்டிய வசனத்தை முன்கூட்டியே ரவீந்தரிடம் “ஸ்கிரிப்ட்” கேட்டு  வாங்கிக்கொண்டுச் சென்று அதற்கேற்றவாறு மனனம் செய்துக் கொண்டு வந்து பிழையின்றி அவர் ஒப்பிப்பார். வசனங்களை, உணர்ச்சிகளைக் கொட்டி ஏற்ற இறக்கத்துடன் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவிப்பதில் ரவீந்தருக்கு நிகர் அவரே. மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர்  ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.

“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.

“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின்  நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.

எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.

நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.

சீதாலக்ஷ்மி நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களே ஏற்று நடித்தார். நாடகத்தின் மூலம் அவருக்கு கிடைக்கின்ற வருமானம் மிகச் சொற்பமான தொகையாகவே இருந்தது. சிவாஜி நாடக மன்றம் நடத்திய “வேங்கையின் மைந்தன்”, “தேன்கூடு”, “நீதியின் நிழல்”, “களம் கண்ட கவிஞன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “ஜஹாங்கீர்” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் காவல்துறையினரை மையமாக வைத்துப் இவர் பாடும் தாலாட்டுப் பாடல் காட்சி  பலமுறை தடை செய்யப்பட்டிருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.

எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களில் அம்மாவாக, சகோதரியாக, நாத்தனாராக, வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அற்புதமான கலைஞர் இவர்.

கே.பி.ராமகிருஷ்ணன்

கே.பி.ராமகிருஷ்ணன்

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராகவும் அவரது நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். ஆரம்பக்கால முதலே எம்.ஜி.ஆருடன் இணைந்து ரவீந்தர் எம்.ஜி.ஆருக்காக எழுதிய அனைத்து நாடகங்களிலும், பெரும்பான்மையான படங்களில் சண்டைக்காட்சிகளிலும், எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த படங்களில் ‘டூப்’பாகவும் நடித்தவர்.

IMG_3165

அசலும் நகலும்

அப்போது ராமகிருஷ்ணன் செளகார்பேட்டையிலிருந்த சிறிய ஓட்டலில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார்.  சினிமாவில் எப்படியாவது நுழைந்து விடவேண்டும் என்று அவர் துடிதுடித்துக் கொண்டிருந்த காலம். அந்த ஓட்டலுக்கு எம்.ஜி.ஆரும் அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியும்  வந்து போகையில் இவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒருநாள் பொங்கலன்று இவரையும் இவரது நண்பர் சீதாரமனையும் எம்.ஜி.ஆர் தன் வீட்டிற்கு அழைத்தார். எம்.ஜி.ஆரின் தாயாரே விருந்து பரிமாறினார்கள். அதற்குப் பிறகு இவருக்கு எம்.ஜி.ஆரின் சிபாரிசு பேரில் படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

எம்.ஜி.ஆர். ரவீந்தருடன் இணைந்து நாடக மன்றம் தொடங்கியபோது தன்னுடன் நடித்த ஸ்டண்ட் நடிகர்களையெல்லாம் இணைத்து அவருடைய நாடகங்களில் நடிக்க வைத்தார். ஸ்டண்ட் நடிகர்களான ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து, குண்டுமணி, புத்தூர் நடராஜன் போன்றவர்களுக்கு வருமானத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதற்காகவே ரவீந்தரிடம் தனது அனைத்து சமூக நாடகங்களிலும் சண்டைக்காட்சிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

தன்னை ஒரு மாபெரும் ‘ஹெர்க்குலீஸ்’ வீரனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. தன்னோடு பணிபுரிகின்ற ஸ்டண்ட் நடிகர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் அப்படி ஒரு கோரிக்கையை ரவீந்தரிடம் வைத்தார். எம்.ஜி.ஆரை நம்பி ஒரு பெரிய கலைஞர்கள் பட்டாளமே வாழ்வாதாரம் பெற்றுக் கொண்டிருந்தது. நடிகர் ஜஸ்டின் (கவர்ச்சி நடிகை பபிதாவின் தந்தை) போன்றவர்கள் எம்.ஜி.ஆரோடு வந்து சேர்ந்துக் கொண்டது அதற்கு பிறகுதான் .

எம்.ஜி.ஆரை ஒரு சமயம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “அட்டைக்கத்தி வீரர்” என விமர்சித்ததாக ஒரு பேச்சு எழுந்தது. “ஏன் சண்டை காட்சிகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்?” என்று ஒரு சமயம் எம்.ஜி.ஆரிடம் வினா தொடுக்கப்பட்டபோது “வீர உணர்ச்சிக்கு அது தேவை என்பதால்” என்று ஒரே வரியில் பதிலளித்தார்.

 ஜி.சகுந்தலா

G.Sakunthala

“இன்பக்கனவு” நாடகத்தில் தொடக்கத்தில் ரத்னமாலா ஏற்று நடித்த பாத்திரத்தை அவர் நீக்கப்பட்டபின் அந்த நாடகத்தில் கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்  ஜி.சகுந்தலா . “மந்திரிகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்ததும் இவர்தான்.

கதாநாயகி, காமெடி, குணச்சித்திரம், வில்லி என பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை. “வியட்னாம் வீடு”  நாடகத்தில் சிவாஜியின் மனைவியாக  வேடமேற்று நடித்தார்.  “நம்ம வீட்டு தெய்வம்” படத்தில் வில்லி வேடம், “நவக்கிரக”த்தில் முத்துராமனின் முதல் மனைவி ,  “கன்னிப்பெண் “ படத்தில்  ஜெய்சங்கருக்கு அம்மா, இப்படி எத்தனையோ படங்களில் நட்சத்திரத் தாரகையாக ஜொலித்தார். இவர் நடித்த கடைசி படம் “இதயவீணை”.

இவருக்கு 1963-ஆம் கலைமாமணி பட்டம் கொடுத்து கெளரவித்தார்கள்.

எம்.கே.முஸ்தபா

mustafa

எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்தில் ஆரம்பக்கால முதலே இணைந்து பணியாற்றியவர் எ.கே.முஸ்தபா. எந்த வேடங்கள் கொடுத்தாலும் அதனை புன்முறுவலுடன் ஏற்று சிறப்பாக செயலாற்றுபவர்.

காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த ‘ஸ்ரீராமபால கான வினோத சபா’ என்ற நாடகக் கம்பெனியில்  நடித்தவர். இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், ‘சட்டாம்பிள்ளை’ வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

1958-ல் வெளிவந்த எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்த “குலதெய்வம்” என்ற படத்தில் இவர் நடித்தார். இந்த படத்தில் நடித்த ராஜகோபால்தான் பின்னர் குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார். 1985-ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் கொடுத்து பொற்கிழி கொடுத்து கெளரவித்தது.

“நீதிபதி”, “கடவுள் மாமா”, “தாயின் மேல் ஆணை”, “ரிக்சாக்காரன்”, “யார் பையன்”, “தாயின் மடியில்”, “பரிசு”, “ஏழைப்பங்காளன்”, “திருடாதே”, “சின்னஞ்சிறு உலகம்” போன்ற பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், துணைக்கதாபாத்திரங்களில்  நடித்து புகழ் பெற்றவர்.

முத்துக்கூத்தன்

இவர் திராவிட இயக்க அபிமான கவிஞர் மற்றும் நாடக நடிகர். “இன்பக்கனவு” நாடகத்திற்கு லட்சுமணதாஸுடன் இணைந்து கவிஞர் முத்துக்கூத்தன் பாடல் எழுதியதோடல்லாமல்   அதில் நடிக்கவும் செய்தார். “நாடோடி மன்னன்” படத்தில் பாடல்கள் எழுதிய பெருமை இவருக்குண்டு. அப்படத்தில் “சம்மதமா…..சம்மதமா ..நான் உங்கள் கூட வர சம்மதமா” என்ற புகழ்ப்பெற்ற பாடல் இவரெழுதியது.

“அரச கட்டளை” படத்தில் வரும் ” ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா..” என்ற பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை எழுதிய கவிஞர் முத்துக்கூத்தன்.

எம்ஜிஆர் படங்களுக்கு பாடலாசிரியராகவும் துணை இயக்குனராக பணியாற்றிய கவிஞர் முத்துக்கூத்தனின் மகன்தான் தற்போதைய பொம்மலாட்ட கலை மூலம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் “கலைமாமணி”  பட்டம் கொடுத்து தமிழக அரசு கெளரவித்தது.

என்.எஸ்.நாராயண பிள்ளை

“இன்பக்கனவு” நாடகத்தில் நடித்த மற்றுமொரு கலைஞர் என்.எஸ்.நாராயண பிள்ளை. 1958-ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் – பத்மினி இணைந்து நடித்து வெளிவந்த “மரகதம்” போன்ற படங்களில் நடித்து தன் நடிப்புத்திறனை வெளிக்காட்டியவர்..

என்.எஸ்.நடராஜன்

“இன்பக்கனவு” நாடகத்தில் நடித்த மற்றொரு அபூர்வமான கலைஞர் இந்த என்.எஸ்நடராஜன். பிற்காலத்தில் இவருக்கும் கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்தது.

குண்டுமணி

gundumanai

ஏ.எஸ்.குண்டுமணி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட வில்லன் நடிகர். “சபாஷ் தம்பி”, “தாயின் மேல் ஆணை” போன்ற ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒவ்வொன்றிலும் இவரைக் காணமுடியும். குண்டுமணியை திரையில் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரோடு எம்.ஜி.ஆர் மோதும்போது திரையரங்கில் ரசிகர்களின் விசில் சப்தம் காதுகளைப் பிளக்கும்.

எம்.ஜி.சக்கரபாணி

chakrapani

எம்,ஜி.ஆர். நாடக மன்றத்தைப் பற்றி எழுதுகையில் எம்.ஜி.சக்கரபாணியை பற்றி எழுதா விட்டால் அது முழுமை பெறாது.

குடும்பச் சூழ்நிலையால், கும்பகோணத்தில் இளமைக்கால முதலே எம்.ஜி.ஆரோடு இணைந்து நாடகங்களில் நடித்ததோடல்லாமல் எம்.ஜி.ஆரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டவர். அண்ணன் தம்பி பாசத்திற்கு இவர்களிருவரும் ஓர் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய முதல் நாடகம் “இடிந்தகோயில்”  நாடகத்திலிருந்து உடனிருந்து நடித்தவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரரான எம்.ஜி.சக்கரபாணி. இவரை ‘பெரியவர்’ என்றும் எம்.ஜி.ஆரை ‘சின்னவர்’ என்றும் திரையுலகில்அன்பொழுக  அடைமொழியிட்டு அழைத்தனர்.

படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கெளரவ வேடங்கள் கம்பீரமாக இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படம் மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு எம்.ஜி.சக்ரபாணி எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தொடங்குவதற்கு மூலக்காரணமாக இருந்ததே சக்ரபாணிதான். இந்த நிறுவனத்தின் முதல் படமான “நாடோடி மன்னன்” படத்தை கே,ராம்நாத் இயக்கத் தொடங்கினார். அவர் திடீரென்று மறைந்துவிடவே அப்படத்தை இயக்கும்படி எம்.ஜி.ஆரை ஊக்கப்படுத்தியதே எம்.ஜி.சக்ரபாணிதான்.

1936-ஆம் ஆண்டு வெளிவந்த “இரு சகோதரர்கள்” முதல் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த “நாளை நமதே” வரை 37 படங்களில் வில்லனாக, அப்பாவியாக, பாசமுள்ள அண்ணனாக, மாமனாராக, தகப்பனாராக நண்பராக ஏகப்பட்ட கெளரவ வேடங்கள் எற்று நடித்து பாத்திரப்படைப்புக்கு உயிரூட்டியவர்.

எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றியபின் அவர் புதிய கட்சி தொடங்குவதற்கு உற்சாகப்படுத்தி அவரை முடுக்கி விட்டவர் எம்.ஜி.சக்கரபாணி. கட்சிப் பொறுப்புகள் எதிலும் தலையிடாமல் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டவர்.

– நாகூர் அப்துல் கையூம்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4

 

Tags: ,

7 responses to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5

  1. நாகூர் ரூமி

    October 28, 2014 at 8:26 pm

     
  2. நாகூர் ரூமி

    October 28, 2014 at 8:30 pm

    Dear Qayyum, You have done excellent work / service to Nagoreans in deed. Insha Allah we can bring it all out in the form of a book. I can publish it through my Kathaugal publications with ISBN number. Please consult friends who may be of some financial help. We can do it. About all important Nagore Literary / Artistic Personalities. When I go to Nagore i Nov or Dec I shall give yr father a few copies which I have published through Kathavugal.

     
  3. அப்துல் கையூம்

    October 28, 2014 at 8:51 pm

    I am planning a short visit on Dec. I will meet you then.

     
  4. Mohamed Iqbal

    October 29, 2014 at 3:42 pm

    இந்த தொடரின் மற்ற பகுதிகளைவிட இதில் அதிக தகவல்கள்.!
    நீங்கள் சிரமப்பட்டு தொகுத்ததை நான் இலகுவாகத் தெரிந்துக் கொண்டேன்.! நன்றி.!

     
  5. தாஜ்...

    October 29, 2014 at 6:15 pm

    எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும்…
    தொடர் 5 யை வாசித்தேன்.

    எம்.ஜி.ஆர் – புகழை
    ஆய்வு செய்பவர் எவரையும் மிஞ்சும் விதமாக
    ஆழத்திலும் ஆழமாக சென்று
    விசயதானங்களை சேகரித்து
    கையூம் ஸார் எழுதியிருக்கும் இந்தத் தொடர்
    வியப்பையே அளிக்கிறது!!!

    பதிப்பகங்கள் கேட்கின்றன என்பதற்காக
    இப்படியான கட்டுரைகளை எழுதுபவர்கள் பலரை
    நான் நன்கு அறிவேன்.
    கூலிக்கு மாரடிக்கும் கதையாய்
    அவர்கள் எழுதிருப்பார்கள்.
    அதனில் இருந்து
    நேர் எதிரான கோணத்தில் இது…
    அருமையிலும் அருமையாய் எழுதப்பட்டிருக்கிறது.

    இங்கே…
    கையூம் ஸார்…
    ஆத்மார்த்தமாய்
    ‘தனது ஊர்காரரான ரவீந்தரின் நியாயமான புகழ்
    வெளிப்படாமலேயே முடங்கிவிட்டதே…’
    என்கிற ஆதங்கத்தில்
    எழுதத் தொடங்க போக…..
    ரவீந்தர் தஞ்சம் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்…
    மிகப் பெரிய ஆளுமை என்பதால்…
    அதற்குறிய
    கட்டுரைக்கான முக்கியத்துவத்தோடு
    எம்.ஜி.ஆரை தூக்கிப் பிடித்திருக்கும் கவனம்
    அலாதியாகிப் போகிறது.
    மெச்சக் கூடியதாக இருக்கிறது..

    இந்த ஐந்தாவது தொடரில்…
    எம்.ஜி.ஆருக்காக ரவீந்தர் எழுதிய
    இரு நாடகங்களிலும்
    பங்கெடுத்த அத்தனை நடிகர் நடிகைகளையும்
    சிரத்தையாக அறிமுகம் செய்திருக்கிறார்.
    ஒவ்வொரு அறிமுகமும்…
    ஆயிரம் பெறும்.
    அத்தனையும் உழைப்பு!
    கையூம் ஸார்
    கொஞ்சமும் சுணங்கியதாகவே தெரியவில்லை.

    இப்பவும்….
    கையூம் ஸாருக்கு
    என் வியப்பையும் / வாழ்த்தையும்
    இங்கே வைக்கிறேன்.

    *

     
  6. rathnavelnatarajan

    November 27, 2014 at 1:22 pm

    எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5 = நாடக மன்றத்தை ஒரு ராணுவக் கட்டுப்பாடு போன்றே எம்.ஜி.ஆர். வைத்திருந்தார். கலைஞர்களின் ஒழுக்கம் மிக முக்கியம் என அவர் கருதினார். ஊர் விட்டு ஊர் பயணிக்கும் கலைஞர்கள் ஏடாகூடமாக எதாவது பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் அது தன்னுடைய ‘இமேஜை’ பெருமளவு பாதிக்கும் என்பது அவருக்குத் தெரியும்.= அப்துல் கையூம் = அருமையான, சற்று பெரிய, நிறைய விபரங்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். = நன்றி சார் திரு அப்துல் கையூம்

     
  7. rathnavelnatarajan

    November 27, 2014 at 1:25 pm

    அருமையான, சற்று பெரிய, நிறைய விபரங்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில்
    பகிர்கிறேன். = நன்றி சார் திரு அப்துல் கையூம்

     

Leave a comment