RSS

பறாட்டா உருண்டை

27 Jul

இதோ மேலே இருக்கும் புகைப்படம் எம்.அப்துல் காதர் என்ற முகநூல் நண்பருடையது. “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த” புண்ணியவான் இவர்தான்.

“நம்மூர் பறாட்டா உருண்டை பற்றி ஒரு பதிவு எழுதுங்கள். எனக்கும் நம்ம வீட்டுக்காரம்மா திட்டச்சேரி காரஹ அஹளுக்கும் அதன் பக்குவம் தெரியவில்லை. அதையும் பாப்புலர் ஆக்கி விட்டு விடலாம்” என்று நாகூர் பாஷையில் எனக்கு மெஸேஜ் விடுத்து, “பறாட்டா உருண்டை” என்ற இப்பதிவை போட்டு நாட்டுக்கு நலன்விளைய காரணகர்த்தாவாக இருந்த மகாபுருஷர்.

“பப்படம்”,
“மொளவுத்தண்ணி”,
“உல்லான்”
“வாடா”
என்று வெவ்வேறு பதிவுகள் தெரியாத்தனமாக எழுதப்போய் நம்மையும் மல்லிகா பத்ரிநாத், நளபாகம் நடராஜன், சஞ்சீவ் கபூர், ரேஞ்சுக்கு ஆளாக்கி, சமையல் பக்குவம் சொல்ல வைத்து விட்டார்களே என்று நொந்து போய்விட்டேன்.

போதாத குறைக்கு நார்வேயிலிருந்து Abunamera Ansari என்ற முகநூல் அன்பர் “சகோதரரே! காண்டாவைப் பற்றி எழுதுங்களேன்” என்ற வேண்டுகோள் வேறு விடுத்துள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆஃப் பாயில், ஃபுல் பாயில், ஆம்லெட், ஆனியன் ஆம்லெட், Spanish Omlette, Scrumbled Egg, Hallf Fry, Full Fry, அவிச்ச முட்டை, கொத்து முட்டை போன்ற சிரமமான முட்டை அயிட்டங்களைத் தவிர்த்து வேறெதுவுமே செய்யத் தெரியாத அப்பாவி நான்.

இந்த லட்சணத்தில், என்னை பண்டாரி ஹமீது நானா, மெய்தீன் நானா, அத்தா இவர்களின் ரேஞ்சுக்கு – ஒரு சமையல்புலியாக தப்புக்கணக்கு போட்டு, சோதித்துப் பார்க்கும் அன்பு உள்ளங்களை என்ன சொல்லி சமாதானம் செய்வது?

ஏற்கனவே நாகூர் இஸ்மாயில் “பறாட்டா உருண்டை”  என்று ஒரு பதிவு போட்டு மகாபுண்ணியம் தேடிக்கொண்டார் என்று ‘சால்ஜாப்பு’ கூறி மெதுவாக நழுவிக் கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். இருந்தாலும் மனசாட்சி என்னை ஓரக்கண்ணில் முறைத்துப் பார்க்க, நண்பருக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பறாட்டா உருண்டையைப் போன்று நானும் பொறிக்கன் சட்டியில் ‘டைவ்’ அடிக்க முடிவு செய்து விட்டேன். (காண்டாவை இன்னொரு பதிவில் சுவைக்கலாமே அபுநமேரா!)

தமிழகத்தில் “புரோட்டா”, இலங்கையில் “பராட்டா”, இந்தோனேசியாவில் “ப்ராத்தா”, பாகிஸ்தானில் “பரோத்தா” என்ற பல்வேறு accent-களில் அழைக்கப்படும் இந்த பதார்த்தம் நம்முடைய உணவில் இன்றிமையாத பண்டமாக இடம்பிடித்து விட்டது என்னவோ ‘ஹக்கான’ உண்மை. ‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம்’ என்ற பழமொழியை மெய்ப்படுத்திய உணவுப் பண்டம் இது.

‘பறாட்டா’வுக்கும், ‘பறாட்டா உருண்டை’க்கும் மூலப்பொருளாக இருக்கும் மைதா மாவு எவ்வளவு ஆபத்தானது என்பது முகநூல் பகிர்வுகளில் ‘பூமராங்’காக திரும்பத் திரும்ப சுற்றி வருகிறது. படிப்பதற்கு ஹிட்ச்காக் மற்றும் நாஞ்சில் பி.டி.சாமி கதையைவிட படுதிகிலாக வேறு இருக்கிறது. இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து இதை படிக்க வேண்டாம்.

மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்க, அதை Benzoyl Peoxide என்ற ரசாயினம் கொண்டு வெண்மையாக்க, அதுதான் மைதா எனும் பண்டமாம்.

Benzoyl Peroxide என்பது நாம் முடியில் அடிக்கும் Dye-யில் உள்ள ரசாயினம். இந்த ரசாயினம் மாவில் உள்ள Protein உடன் சேர்ந்து நீரிழிவு நோய்க்கு காரணியாக அமைகிறதாம்.

இது தவிர Alloxan என்னும் ரசாயினம் மாவை மிருதுவாக்க கலக்கப் படுகிறதாம். மேலும் Artificial colours, Mineral Oils, Taste Makers, Preservaties, Sugar, Saccarine, Ajinomotto போன்ற அயிட்டங்கள் கலக்கப்பட்டு மைதாவை மேலும் அபாயகரமாக ஆக்குகிறதாம்.

அதற்குள் Tired-ஆகி விடுவதா? மேலும் கேளுங்கள். இந்த Alloxan சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன் படுத்தப்படுகிறதாம். ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கு நீரிழிவு வர துணை புரிகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

இதையெல்லாம் பார்க்கும்போது பேசாமல் ஜாலியாக ‘கொக்கா கோலா’வையே குடித்து திருப்தியாக ஏப்பம் விடலாம் போலிருக்கிறது. கொக்கா கோலாவினால் ஏற்படும் தீமை இதைவிட எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. ‘Moral of the Story’ என்னவென்றால் பரோட்டா நம் வாழ்வில் பிரகாஷ்ராஜ் போன்று ஒரு வில்லன் என்பது தெள்ளத் தெளிவாக புலனாகிறது.

ஒத்தை, டபுள், ட்ரிபுல் என்று பரோட்டாவே கதியென்று கிடக்கும் நாகூர் மக்கள் இதை கவனிப்பார்களாக. (Double, Triple என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு ‘Single’யை மாத்திரம் ஏன் ‘ஒத்தை’ என்று தமிழில் பாசமாக அழைக்கிறார்கள் என்பது மட்டும் சிதம்பர ரகசியம்) இந்தப் பதிவை படித்துவிட்டு பாபா பாய், மம்முட்டி கடைக்காரர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தால் வக்கீல் அபுதல்ஹா, ஜலால் போன்றவர்கள்தான் எனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

சில இளைஞர்கள் கண்ணடிக்கு முன்பு மணிக்கணக்காக நின்று தலைவாரி அழகு பார்த்துவிட்டு கடைசியில் கன்னா பின்னாவென்று கலைத்துவிட்டு ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று முடிஅலங்காரம் செய்த திருப்தியோடு வெளியே புறப்படுவார்கள். “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்று பாரதியார் பாடியதைப்போல கஷ்டப்பட்டு பிசைந்து, படர்த்தி, இழுத்து, சுற்றி, தவ்வாவில் போட்டு புரட்டி எடுத்து மொறுமொறுவென்று வட்டவடிவத்தில் சுட்டெடுத்த புரோட்டாக்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து ஆத்திரம் தீர அடித்து நசுக்கி பஸ்பம் ஆக்கினால்தான் இந்த புரோட்டா மாஸ்டர்களுக்கே பரமதிருப்தி ஏற்படும்.

(டீ மாஸ்டர் டீ போடுவார், புரோட்டா மாஸ்டர் புரோட்டா போடுவார். அப்ப. ஹெட் மாஸ்டர் மண்டையை போடுவாரா? – இந்த ‘ஜோக்’கும் இந்த நேரத்தில் ஞாபகம் வரக்கூடாதுதான். வந்துவிட்டதே என்ன செய்ய?)

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கி பரோட்டாவும் பிரபலமடைந்ததாகச் சொல்கிறார்கள். இதில் எனக்கு புரியாத புதிர் ஒன்று உண்டு. .

மஞ்சள் நிறமாக இருக்கும் கோதுமை மாவினை ரசாயினம் கலந்துதானே மைதா மாவு உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் இரண்டாம் உலகப்போரின்போது கோதுமை பற்றாக் குறை ஏற்பட்டபோது, கோதுமையால் உருவான மைதா மாவு புழக்கத்தில் வந்தது எப்படி? லாஜிக் இங்கு இடிக்கிறது.

இன்னும் “பறாட்டா உருண்டை” வரவில்லையே என்று நீங்கள் ஆளாய்ப் பறப்பது எனக்கு புரிகிறது. பொறுமை (சில்லடி ஓரமாக இருக்கும்) கடலினும் பெரிது.

சாப்பாடு அயிட்டங்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு அயிட்டம் இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

மதுரை என்றால் இட்லி அல்லது ஜிகர்தண்டா. ஊத்துக்குளி என்றால் வெண்ணெய். கோவில்பட்டிக்கு கடலை மிட்டாய். திருநெல்வேலிக்கு அல்வா, பண்ணுருட்டிக்கு பலாப்பழம் – இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புண்டு. திட்டச்சேரிக்குப் போனால் குவளைக்கேக்கு வாங்காமல் யாரும் திரும்புவதில்லை.

பிரியாணி என்று எடுத்துக் கொண்டால் – ஆம்பூர் பிரியாணியைத் தொடர்ந்து, திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணி, கொளத்தூரார் பிரியாணி என்று பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

சீன நாட்டில் கடந்த 600 வருடங்களாக பாரம்பரியம் உள்ள “Peking Duck” அயிட்டத்தைச் சாப்பிடுவதற்காகவே படையெடுக்கும் யாத்திரிகர்கள் உண்டு. பீக்கிங் நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் “லீகுன் ரோஸ்ட் ரெஸ்டாரெண்ட்டை”த் தேடி வரும் வாடிக்கையாளர்கள் கணக்கிலடங்காது.

திருநெல்வேலி இருட்டுக் கடைக்கு தேடிவந்து அல்வா வாங்கும் வாடிக்கையாளர்களைப்போல, வெகுதூரத்திலிருந்து காரில் ஏனங்குடிக்கு வந்து தாடிக்காரர் கடையில் பிரியாணியை ஒரு கைபார்த்து விட்டு போகும் பிரயாணிகளை நான் பார்த்திருக்கிறேன்.

பிரியாணியைக் கண்டுபிடித்தது ஷாஜகானின் மனைவி மும்தாஜ் என்று சொல்கிறார்கள். இந்த ஒரு மகத்தான சாதனைக்காகவே மும்தாஜுக்காக தாஜ்மகால் கட்டியது சரிதான் என்று தாரளமாக வாதாடலாம்.

(ஆசிரியர்: ஷாஜகான் மும்தாஜுக்காக தாஜ்மகால் கட்டினான், சோழ மன்னன் எதைக் கட்டினான்?
மாணவன் : சோழ மன்னன் வேட்டி கட்டினான் சார்!)

– (மறுபடியும் ஜோக் மண்டைக்குள்ளிருந்து வெளிவந்துவிட்டது)

என் கீழக்கரை நண்பர்கள் வீட்டுக்கு விசிட் செய்கையில் தொதல், சீப்புபணியம், ஓட்டுமா, மாசி என்று எது வைக்கிறார்களோ இல்லையோ “இளநீர் கடல் பாசி” கட்டாயம் மெனுவில் இடம் பெற்றிருக்கும். அதுபோல் காயல்பட்டினம் நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால் முக்கலர் அல்வா வைத்து விடுவார்கள்.

நாகூருக்கு சிறப்பு சேர்ப்பதற்கென்றே பல உணவு அயிட்டங்கள் உள்ளன. அதில் பால்கோவா, குலாப்ஜான், வாடா, உப்புரொட்டி, பறாட்டா உருண்டை என்று நிறைய அயிட்டங்களை க்யூவில் நிறுத்தலாம். உப்புரொட்டிக்கு நாகூரில் PIONEER-ஆக இருந்தவர் என்னுடைய தந்தைவழி பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸ் அவர்களின் தம்பி இஸ்மாயீல் சாகிப் என்று சொல்வார்கள். சுமார் 65 வருடங்களுக்கு முன்பு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அவருடைய பேக்கரி இருந்தது. அதனைத் தொடர்ந்து சாபான், இன்னபிற பேக்கரி மன்னர்கள். நல்லவேளை அய்யங்கார் பேக்கரி இதற்கு போட்டியாக வரவில்லை.

வெளிநாட்டுக்கு பார்ஸல் ஆகி பயணமாகும் வஸ்துக்களில் உப்புரொட்டிக்கு ஒரு தனியிடமுண்டு.

இடியாப்பத்திற்கு – பாயா மேட்ச் ஆனதைபோல, தேங்காய்ப்பால் சோற்றுக்கு – கருவாட்டு ஆணம் மேட்ச் ஆனதைப்போல, உப்புரொட்டியானது – தேத்தண்ணிக்கு (தேயிலைத் தண்ணீர்) இணைபிரியா காம்பினேஷன் ஆகிவிட்டது. சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டிலும் உப்புரொட்டியும் தேனீரும் நெருக்கமான தோழிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்துவிற்கு இந்த உண்மை தெரிந்திருந்தால் கண்ணுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு என்ற பாடலில் “உப்புரொட்டிக்கு டீ அழகு” என்ற வரியையும் பாடலில் புகுத்தி நாகூர்க்காரர்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பார்.

GLOBE-க்கு உலக உருண்டை என்ற அழகான பெயரைக் கொடுத்ததைப்போன்று, இந்த பதார்த்தத்திற்கு பறாட்டா உருண்டை என்று நாமம் சூட்டிய சீதேவி யாரென்றுத் தெரியவில்லை. பார்ப்பதற்கு போண்டாவைப் போலிருக்கும் ஆனால் போண்டா கிடையாது. அதற்குள் உருளைக்கிழங்கு இருக்கின்றதா என்றால் அதுவும் இருக்காது. பெரியார் சொல்லும் வெங்காயத்தைப்போல உறித்துப்பார்த்தால் ஒண்ணுமே இருக்காது. ஆனால்…. சுவை இருக்கும். சொல்லி புரிய வைக்க முடியாத சுவை.

உருண்டையாக இப்பதார்த்தம் இருப்பதினால் இதற்கு பறாட்டா உருண்டை என்று பெயர் வைத்துவிட்டார்கள் போலும். அதே லாஜிக்படி பார்த்தால் “சமூசா முக்கோணம்” “மைசூர் பாகு செவ்வகம்” என்றல்லவா பெயர் வைக்க வேண்டும்? கர்னாடகாவில் மங்களூர் போண்டா என்ற ஒன்றை வைத்தார்கள். சுவைத்துப்பார்த்தால் Same same நம்ம பறாட்டா உருண்டை.

மற்றவர்களை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் நாகூர்க்காரர்கள் வித்தியாசமாகச் செயல் படுவார்கள். உலகம் முழுதும் ‘குலோப்ஜாமூன்’ உருண்டை வடிவில் இருக்கையில் நாகூரில் மட்டும் அம்மிக்குளவி வடிவில் நீண்டு இருக்கும். “பாபாஜான்” “நவாப்ஜான்” “வலம்புரிஜான்” என்பதைப்போல அதற்கு குலோப்ஜான் என்று பெயர்மாற்றம் செய்திருப்பார்கள்.

ஊரு உலகத்தில் சமூசா குட்டிக் குட்டியாக இருக்கும் நாகூரில் மட்டும் மெகா சைஸில் இருக்கும். முக்கால் அடி விட்டத்தில் ஜிலேபி தயாராகும். திருப்பதி லட்டு சைஸில் ஜம்போ லட்டு தயாராகும். நாகூரில் இருந்து வாங்கிச் சென்ற பருத்திக் கொட்டை அல்வாவை எனது வெளியூர் நண்பருக்கு நான் அன்பாக கொடுக்க. அவர் “சார் இது மனுசன் சாப்பிடறதா அல்லது மாடு சாப்பிடறதா?” என்று நக்கலடிக்க கொடுத்த பண்டத்தையும் வெடுக்கென்று பிடுக்கிக்கொண்டு வந்து விட்டேன்.

சுட்ட வாத்து சாப்பிட பீக்கிங்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையைத் தேடி செல்வதைப்போல, நாகூரில் இளம் பிராயத்தில் “பறாட்டா உருண்டை” சாப்பிடுவதற்கென்றே நாங்கள் ஆசையாய் தேடிச் செல்லும் கடை ஒன்று இருந்தது. அதுதான் ஹேட்பாய் கடை. தர்கா முற்றத்தில் வீற்றிருக்கும் அவரது அந்திக்கடை. நாங்கள் சென்றதும் சிறிய கோரைப்பாய் ஒன்றை விரிப்பார். ஒரு சட்டியில் நெருப்பை வைத்து அதன்மேல் ஒரு சிறிய “Grill” ஒன்று வைத்து “சாத்தே”, “சாப்பீஸ்” “குஷ்கா” போன்ற அயிட்டங்கள் விற்பார். சாப்பீஸ் ஆறு காசு, குஷ்கா 15 காசு என்று நினைக்கிறேன். அவர் பொறிக்கும் “பறாட்டா உருண்டை” மிகவும் பிரசித்திப் பெற்றது. பில்கேட்ஸ் “Microsoft'” கண்டுபிடிப்பதற்கு முன்னரே மைக்ரோசாஃப்ட் ஆக இருக்கும் பறாட்டா உருண்டையை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை சரியாகத் சொல்லத் தெரியவில்லை. பறாட்டா உருண்டைக்கு மேட்சிங் Gravy எது தெரியுமா? ஈரல் ஆணம்.

பறாட்டா உருண்டையை அதிகம் முறுவ விடாமல் பதமாக பொறித்து எடுப்பதும் ஒரு கலை. எண்ணெய் கோர்த்து இருக்கக் கூடாது.  பஞ்சுபோல இருக்கும் அதே சமயம் ரப்பர் போன்றும் இருக்கும் அதில்தான் சுவையே.

நாகூருக்கு விசிட் அடிப்பவர்கள் இந்தப் பதிவை படித்து விட்டு தரிசனம் செய்கிறார்களோ இல்லையோ கரிசனமாக பறாட்டா உருண்டையை கண்டிப்பாக பதம் பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அப்துல் கையூம்

(பி.கு. பராட்டா உருண்டை புகைப்படத்தை யாராவது எனக்கு அனுப்பி வைத்தால் தகவல் தந்த நண்பரின் பெயரோடு புகைப்படம் இப்பதிவில் பிரசுரிக்கப்படும்)

தொடர்புடைய சுட்டி: புரோட்டா பிரியர்களுக்கு ஒரு அபாய மணி

நாகூர் இஸ்மாயீலின் பறாட்டா உருண்டை

 

Tags: , , , ,

5 responses to “பறாட்டா உருண்டை

  1. SHAHULHAMID

    July 27, 2012 at 10:36 am

    நாகூர் கால் மாட்டு விளக்கு தூணுக்கு கீழே தினமும் மாலையில் புரட்டா உருண்டை போடுறார் ஊருக்கு போகும்போதெல்லாம் தினம் சாப்பிடுவேன் கொஞ்சம் ஓரப்பான ஆனமும் புறாட்ட உருண்டய்ம் திண்டா தனி மஜா தாங்கனி

     
  2. ansari

    July 27, 2012 at 11:29 am

    nana. thanks for indicate me in this article. insha allah i will try to make prata urudai in my iftar time then i will take photo, send you. thanks again for prata urudai i am waiting for nagore kanda.

     
  3. Abunamera Ansari

    July 27, 2012 at 11:35 am

    nana. thanks for indicate me in this article. insha allah i will try to make prata urudai in my iftar time then i will take photo, send you. thanks again for prata urudai i am waiting for nagore kanda.

     
  4. Abdul Qaiyum

    July 27, 2012 at 10:20 pm

    “கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது” என்று சொல்வார்கள். “பறாட்டா உருண்டை”க்கு முன்னுரை தரவேண்டும் என்ற நோக்கில் “பறாட்டா”வை சற்று மேயப் போய். சீர்காழி கவிஞரான கவிஞர் தாஜ் “புரோட்டா”வின் வரலாற்றையே தொகுத்து விட்டார். நாங்கள் ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும்போது “Hotel De Broadway” என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘கையேந்தி பவன்’களில் புரோட்டா சாப்பிடுவோம். சிலர் திட்டும்போது “பிச்சுப்புடுவேன் பிச்சு” என்பார்கள். அதுபோல சர்வர் புரோட்டாவை இலையில் பிய்ச்சு பிய்ச்சுதான் போடுவார். அப்படி ஒருக்கால் யாருக்காவது பிய்ச்சு போடவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் ‘சாமி’ வந்ததுபோல் ஆடுவார். “ஏன்யா! அவருக்கு மாத்திரம் பிச்சு போடுறே. எனக்கு ஏன்யா பிச்சு போடலை?” என்று வம்பிழுப்பார். ‘அட வாழப்பழ சோம்பேறிகளா! இன்னும் கொஞ்சம் போனால் ஊட்டி விடச் சொல்லுவானுங்க போலிருக்கே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்

    இதோ தாஜ் அவர்களின் “புரோட்டா.. ஒரு சின்ன வரலாறு” பதிவு ”

    பறாட்டா கண்டுப் பிடிப்பைப் பற்றி இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருப்பதை நான், ஹாங்காங் போக (1994) மலேசியா போய்… அங்கே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்த போதுதான்.

    1.புரோட்டா என்பது ஓர் மலேசிய வாழ் தமிழர்களின் கண்டுப் பிடிப்பு.
    2.தமிழகத்தில் தமிழ் முஸ்லீம்களின் கண்டுப் பிடிப்பாக அது இருந்தாலும், அதை ஏற்று சீராட்டிப் பாராட்டி வளர்தெடுதது மலேசியாதான்.

    இந்த இரண்டு கருத்துகளுமே அன்றைக்கு எனக்கு புதிய விசயமாகவே பட்டது. அதுவரை நான், நம் நாட்டு இஸ்லாமியர்களின் மகத்துவமான… இஸ்லாமியர்களுக்கே சொந்தமான உணவாக மட்டும்தான் கருதிவந்தேன்.

    மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ புரோட்டோ இத்தனை ‘கிரேஸியான உணவாக இருக்கும் என்பதோ, அதன் மீது பேட்டன் ரைட் கொண்டாடும் அளவுக்கு அதனை நேசிக்கும் யதார்த்தமோ எனக்கு தெரியாது.

    ஊரில் கூட நகர்புற இஸ்லாமிய ஹோட்டல்களின் புரோட்டோவைவிட, நாகூர் மாதிரியான நடுத்தரமான ஊர்களிலும், மரைக்காயர்கள் அதிகம் வாழும் பட்டிணக்கரை ஊர்களான… அதிராம்பட்டினம், பரங்கிப் பேட்டை, திருமுல்லைவாசல்.. தவிர, ராவுத்தமார்கள் அதிகம் வாழும் லால்பேட்டை, வடகரை, நீடூர் நெய்வாசல், தேரிழந்தூர் போன்ற கிராமம் அளவிலான ஊர்களில் உள்ள ஹோட்டல்களில் மட்டுமே அதிகத்திற்கும் அதிகம் புரோட்டோவை விரும்பி சாப்பிட்டவனாக பழக்கப்பட்ட எனக்கு, அதனை தாண்டிய அழகிலும் சுவையிலும் மலேசியாவில் புரோட்டா கிடைக்கும் என்று கற்பனைக் கூட செய்ததில்லை.

    அங்கே போய் இருந்த போதுதான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழ் ஹோட்டலாக ஏறி இறங்கி அதன் சுவையை, வித்தியாசமான அதன் மல்லிகைப்பூ தனத்தையும் அதன் வாசனையும் அறிந்தேன். அடிப்படையில் எனக்கு கொஞ்சம் சமையலைப் பற்றி தெரியும். இந்த தெரிதல், என் தந்தையினால் கிட்டிய வரப்பிரசாதம். மலேசியாவின் புரோட்டோவை நான் மெச்சுகிறேன் என்றாலும், அங்கே மகத்துவமிக்க அந்தப் புரோட்டோவுடன் அதை நனைத்து சாப்பிட தாளிச்சான்ணு ஒன்னை சொல்லிவச்சா மாதிரிக்கு… எல்லா புரோட்டோ ஹோட்டல்களிலும் வைப்பார்கள் பாருங்கள்… அந்தக் கொடுமைச் விவரிக்க வார்த்தைகளே கிடையாது!

    நான் ஹாங்காங் போனேன் என்று சொன்னேன். அஸிஸ்டென்ட் செஃப்பாகத்தான் அங்கே சென்றேன். ‘பனானா லீவ்ஸ் கறிஹவூஸ்’. என்கிற சிங்கப்பூர் தமிழன் வகையை உணவுக்கான ‘திரி ஸ்டார் ஹோட்டல்’ ஹோட்டல் அது. சிங்கப்பூர், மலேசியா போய்வரும் சீனர்கள் நம் தமிழர்களின் புரோட்டா, நம்ம ஸ்பைஸ் கொண்ட கறிவகைகள் மீது மோகம் கொண்டிருந்தால்… அதே ஆட்களை கொண்டு அங்கேயே நம்ம ஹோட்டலை ஓர் சீனன் திறந்து, அந்த சின்ன ஹாங்காங் நகரத்திற்குள்ளேயே பல பகுதியில் கிளைகளையும் திறந்து வெற்றிகரமாக நடத்திவந்தான். அதன் கவுலூன் பகுதிலுள்ள ஒரு கிளைக்குதான் நான்.

    நம்ம சமையலில் நான் பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப் பழகியிருக்கிறேன் என்றாலும், புரோட்டா எனக்கு வராது. இப்பவும் கூட, வீட்டில் வீட்டுக்காரி சின்ன எவர்சில்வர் பாண்டத்தில் மாவிட்டு குழப்பி வைத்து, பின் லாவகமாக அதனை சின்ன உருண்டைகளாக வகுத்து, வீசி சுருட்டி தட்டி வைப்பதை ஓர் சிறுவன் மனோபாவத்தில் வேடிக்கைப் பார்ப்பேன்.

    இது நமக்கு வறாது என்று நான் எதுவொன்றைப்பற்றியும் மூளைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டால் போச்சு! எந்த காலத்திலும் நம் மூளை அதனைத்தான் நமக்குத் திருப்பி சொல்லும். ‘உனக்கு ப்ரோட்டா வராது’! (குழந்தையில்லாமல் போகும் தம்பதிகளில் பலருக்கு இந்த மனரீதியான சங்கடங்கள் என்பதுதான் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.) மூளைக்கு ஒருதரம் அனுப்பிய ஆர்டரை மாற்றுவதற்கு பெரிய பயிற்சி தேவையாக இருக்கும் என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன். புரோட்டாவுக்காக நான் அப்படியொரு சிரமம் கொள்ளாமலேயே கழித்து வருகிறேன்.

    பனானா லீவ்ஸ் கறிஹவூஸில், புரோட்டாவுக்கு மாவை தினம் இரண்டு மூட்டை, மூன்று மூட்டைக்கணக்கில் மிஷினில் இட்டுத்தான் பிசைந்தெடுப்பார்கள். அதனை வீசி புரோட்டாவாக உருமாற்ற சிங்கப்பூரில் இருந்து வந்த நம் தமிழர்கள் மூன்று பேர் பணியாற்றுவார்கள். அந்த ஹோட்டலின் ஃபுட் கோர்ட்டின் மையப்பகுதியில் ஏசி கண்ணாடி அறைக்குள் அவர்களது புரோட்டா வீச்சு நடக்கும். சாப்பிட வந்த சீனர்களில் பெண்களும் சிறுவர்களும் அதை ஒரு வேடிக்கை நிகழ்வாகவே பார்ப்பார்கள். அதற்கு ஒத்து புரோட்டோ வீசுபவர்களும் மேலே அந்தரத்தில் தூக்கிப் போட்டு சர்க்கஸ் எல்லாம் செய்வார்கள். சமையல் அறையில் இருக்கும் எங்களுக்கு கைத்தட்டல் கேட்காத நாளே இருக்காது.

    மலேசியாவிலும் சரி, நான் அருகே பார்த்த ஹாங்காங்கிலும் சரி புரோட்டாவிற்கு மாவு பிசைகிறபோது… ‘மர்ஜிபன்’ என்கிற மஞ்சள் நிறமுள்ள டால்டா மாதிரியான வஸ்துவை சேர்க்கிறார்கள். அதுதான் அங்கே பரோட்டா மல்லிகைப் பூ ஆவதற்கும், அந்த ஸ்பெஷல் வாசனை வருவதற்கும் ஏக காரணம்.

    இங்கே… இன்றைக்கு கண்பார்க்கும் இடங்களில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் புரோட்டா போடுகின்றார்கள். அய்யர் கடைகளில் கூடப் போடுகின்றார்கள். சாக்கடைக்கு மிக அருகாண்மையில் கட்டாயம் புரோட்டா டேபில் இருக்கும். அதன் மாவு பிசையும் அலாதியான அழகை எழுத நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.

    – கவிஞர் தாஜ்

     
  5. Raja Dawood.

    July 30, 2012 at 8:49 am

    Thanks Mr. Abdul Qaiyyum. Very nice story about parotta and parotta urundai. I really enjoyed it while reading as a nagoorian. i hope u know me. My name is Raja – Syed Palli ex- muthavalli (late) H. kalifa shah malim – son. Keep it up. Maa’ssalamah.

     

Leave a comment