RSS

புலவர் ஆபிதீன் ஆத்திகரா? இல்லை நாத்திகரா?

04 Aug

1916-ஆம் ஆண்டு நாகூரில் பிறந்த புலவர் ஆபிதீனின் சிந்தனை எப்போதும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அவருடைய சிந்தனைக் கோணத்தை மேலோட்டமாக பார்க்கையில் நேரான பாதையை விட்டு விலகியோடி அவர் பாடுவதாக தோற்றமளிக்கும். ஆனால் பொருளுணர்ந்து விளங்குபவர்களுக்கு அதன் உள்ளர்த்தம் புரியும். வினா கேட்பது எளிது. அதற்கு விளக்கம் சொல்வது அரிது.

கவிஞர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காண்பிப்பதற்காகவே குதர்க்கமாக சிந்திப்பார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. குதர்க்கமாக கேள்வி கேட்டபின் புத்திசாலித்தனமாக பதில் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றால்……? நமக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் போனாலும், அந்த கவிதையை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்று நழுவிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. குதர்க்கமான சிந்தனைகளுக்கு நாம் விளக்கம் கேட்கப்போய், பதிலானது அதைவிட குதர்க்கமாக வந்தால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது.

நண்பர் நாகூர் ஆபிதீனின் வலைப்பதிவில் படித்த கவிஞர் ஜபருல்லாவின் கவிதை இது. (ஒரே பெயரை இரண்டு ஆபிதீன்களும் வைத்துக் கொண்டிருப்பதால் வாசகர்களும் பயங்கரமாக குழம்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்)

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

இந்த கவிதைக்கு அவர் விளக்கம் கேட்கப்போக “ஹா.. ஹா…ஹா.. ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான்” என்ற பதில் வர, ஆபிதீன் அதிர்ச்சிக்குள்ளாக, மேலும் அவர் விளக்கம் கேட்டிருந்தால் கவிஞர் இப்படிக்கூட பேசி அவரை சரிக்கட்டியிருப்பாரோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது.

நல்ல Hour, கெட்ட Hour என இல்லை, எல்லாமே நல்ல நேரம்தான்

என்று சமாளிபிகேஷன் செய்திருப்பார் கவிஞர். இதற்காகத்தான் இதுபோன்ற கவிஞர்களிடம் நாம் அதிகமான கேள்வி கேட்கக் கூடாது என்றுச் சொல்வது. எனது அறிவுரை இதுதான். குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் குதர்க்கமான கேள்விகள் கேட்கலாம். ஆனால் குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் ஒருபோதும் நேரான கேள்விகள் கேட்கவே கூடாது.

இருட்டில் இருந்தான் இறைவன் – நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!

என்று நாகூர் சலீம் அவர்கள் எழுதிய வரிகளை விமர்சித்து “அது தவறு” என்று சுட்டிக்காட்டியிருந்தேன். (பார்க்க: இறைவனும் இருட்டும்)

இறைவன் எண்ணற்ற நபிமார்களை பூமிக்கு அனுப்பி வைத்தானே அவர்களும் இறைசெய்தியை மானிடர்களுக்கு எட்டத்தானே செய்தார்கள்? இருட்டில் இருந்த இறைவனை நபிகள் நாயகம்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறதே என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.

நாகூர் சலீம் எழுதியது சரிதான் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இவ்வரிகளை அகமியக் கண்களோடு பார்க்க வேண்டுமென்று என் வாயை அடைத்து விட்டார்கள். அதாவது, “உதயம், உச்சம், அந்தி, மறைவு போன்ற செயல்பாட்டு குறியீடுகள் சூரியனை முன்னிட்டு சொல்லப்படும் பொழுதுகளாம். அவைகள் நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகள் தானே தவிர உதயம், உச்சம், அந்தி, மறைவு என்பது சூரியனுக்கில்லை என்று விளக்கம் தந்தார்கள். “மறைந்த பொக்கிஷமாக இருந்தேன்” என்ற இறைக் கூற்றான நபி மொழி, சிருஷ்டிகளை படைக்கும் முன் ‘அமா’விலிருந்தான் எனும் நபிமொழியின் அடிப்படையில் இருளில் இருந்தான் என்று சிலரால் சுட்டிக் காட்டப்படுவதும், இவ்வாறு வரும் தொடர்பு நிலையை குறிக்கும் வார்த்தைகளை வைத்துதானாம்.

“அகமியம், மெஞ்ஞானம் இவைகளை பற்றி அறிந்திராத அதிகப்பிரசங்கியான உனக்கு இந்த கேள்விகளெல்லாம் தேவைதானா?” என்று என் மனசாட்சி என்னை மிரட்ட, அன்றிலிருந்து கேள்வி கேட்கவே எனக்கு ‘கிலி’ பிடித்துக் கொண்டது.

அண்மையில் நான் படித்த புலவர் ஆபிதீன் (இது 1916-ல் பிறந்த ஆபிதீன்) அவர்களுடைய “கருணையுள இறையவனே!” என்ற கவிதையை படித்து நான் மிகவும் குழம்பிப் போய்விட்டேன், அவர் “ஆத்திகரா? இல்லை நாத்திகரா?” என்று என் மனதுக்குள் சிறிய பட்டிமன்றம் கூட வைத்துப் பார்த்தேன். தொடக்கத்தில் குழம்பிப் போனாலும் கூட கடைசி வரிகளை படித்தபின்தான் எனக்குள்ளிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எல்லாமுன் செயலென்று
ஏற்கவிலை; ஏனென்றால்,
எல்லாமே நீ செய்தால்,
ஏன்பின்னர் தண்டனையே?

என்கிறார் புலவர். எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள். “எல்லாம் அவன் செயல்” என்று இந்துமதம்கூட அறிவுறுத்துகிறது. ஆனால் புலவர் ஆபிதீன் மட்டும் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார். அதற்கு அவர் கேட்கும் கேள்வியும் நியாயம்போல் தெரிகிறது. “எல்லாமே அவன் செயல் என்றால் பிறகு எதற்காக இறைவன் நமக்கு தண்டனை வழங்க வேண்டும்?” “எதற்காக இந்த கேள்வி, கணக்கு? எதற்காக இம்மை மறுமை? எதற்காக சுவர்க்கம் நரகம்? எதற்காக இறுதி நாள் தீர்ப்பு?

புலவர் ஆபிதீனின் ஒரு சின்ன கேள்விக்குள் இத்தனை துணைக்கேள்விகளும் அடங்கி விடுகின்றன. புலவருக்கு பைத்தியம் கீத்தியம் பிடித்து விட்டதா? இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஏன் இந்த குதர்க்கமான கேள்வி? நம் ஈமானையே ஆட்டம் காண வைக்கும் கேள்வியல்லவா இது? என்று நாம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். அடுத்துவரும் வரிகளை பாருங்கள்:

என்னுள்ளே இருப்பதுவாய்
எண்ணவிலை; ஏய்க்கவிலை
என்னுள்ளே சிக்கியபின்
எத்தவமும் அவசியமோ?

என்று பாடுகிறார் புலவர். “பிடறி நரம்பைவிட சமீபமாக இறைவன் இருக்கின்றான்” என்கிறது இஸ்லாம், “இறைவன் உனக்குள் இருக்கிறான்” என்கின்றது இந்துமதம்.

புலவர் ஆபிதீனுக்கு மாத்திரம் வரக்கூடாத சந்தேகம் ஒன்று வந்து அவரை ஆட்டிப் படைக்கின்றது, அவருக்குள் இறைவன் இருப்பதாக அவர் நினைக்கவில்லையாம். அவர் கூறும் காரணமும் நம்முடைய சிந்தனையைத் தூண்டுகின்றது. “நமக்குள் இறைவன்” என்று ஆகிவிட்டபோது மனிதன் ஏன் இறைவனை வழிபட கோயிலுக்கும், பள்ளிவாயிலுக்கும் சென்று வரவேண்டும்? “புலவரே! உங்களுக்கு சிந்தனை வருவதென்னவோ நியாயம்தான். அதற்காக எங்களை ஏன் வீணாக போட்டு குழப்புகின்றீர்” என்று அவரைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது

எங்கெங்கும் நிறைந்தவனாய்
எப்பொழுதும் நம்பவில்லை.
எங்கெங்கும் நீயிருந்தால்
எவ்வுருவும் உனதலவோ?

என்று பாடுகின்றார். அப்படியென்றால் “எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்! அல்லாஹ்!. எல்லாம் அறிந்தவனே சுபுஹானல்லாஹ்” என்ற பாடல் பொய்யா? “இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்கிறதே இந்துமதம். எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று சொன்னால் காற்று, நீர் மழை, சந்திரன், சூரியன் எல்லாமே இறைவன்தான் என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால் அவைகளை வணங்குவது எப்படி தப்பாகும்? என்ற விஷமத்தன்மான ஒரு கேள்வியை சூசகமாக எழுப்பிவிட்டு நம்மை பாடாய்ப் படுத்துகிறார் புலவர் ஆபிதீன்.

கண்ணுக்குள் மணியாயும்
கருதியதுங் கிடையாது
கண்ணுக்குள் மணியானால்
காரிருளில் செயலெங்கே?

இறைவன் கல்புக்குள் இருக்கிறான் என்பார்கள் சிலர். கண்ணின் மணியாய் இருக்கின்றான் என்பார்கள் வேறுசிலர். “கண்ணுக்குள் மணியானால் பயங்கரமான இருட்டிலும் நம் கண்கள் காண வேண்டுமே? இப்படியெல்லாம் நம்மை போட்டுக் குழப்பும் புலவரின் மீது நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது, இவருடைய கவிதையை படிப்பதற்கு பதிலாக படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்ததினால்தானே இத்தனை குழப்பமும், வீண் சந்தேகங்களும்?

இறுதியாக அவர் வடிக்கும் வரிகளில்தான் கிளைமாக்ஸ் அடங்கி இருக்கின்றது.

கண்ணாலும் காண்பவெலாம்
கட்டாயம் அழியுமாதல்,
கண்ணாலும் காணொண்ணாக்
கருணையுள இறையவனே!

இதைப் படித்து முடித்த பிறகுதான் அவர் ஈமான் மீது நமக்கு நம்பிக்கையே துளிர்விடுகின்றது. நமக்கு தெளிவும் பிறக்கின்றது.

ஏன் இறைவன் அரூபமாக இருக்கின்றான் என்பது மில்லியன் டாலர் கேள்வி. மனிதன் இறைவனை நம்ப வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அவனுக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஒரே ஒரு முறை அவன் எல்லோருக்கு முன்பும் வானத்தில் தோன்றி “நான்தான் இறைவன்” என்று நமக்கு வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினையே இல்லையே. உலகத்தில் எந்த நாத்திகனும் இருக்க மாட்டான். எவனும் பாவம் செய்ய மாட்டான். மோசம் செய்ய மாட்டான், ஊரார் பொருளை கொள்ளையடிக்க மாட்டான். சூது, வாது, கொலை, கொள்ளை எதுவும் உலகில் நிகழாது. எல்லா காவல் நிலையங்களையும் அடைத்துவிட்டு இந்த போலீஸ்காரர்களையெல்லாம் பேசாமல் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

புலவர் ஆபிதீனின் இறுதி வாக்கியம் எந்த ஒரு நாத்திகனையும் ஆத்திகனாக்கி விடும், அவனை இறைவன்பால் சிந்திக்க வைத்துவிடும்.

நம் கண்கள் காணும் காட்சிகள் யாவும் உண்மையல்ல. அண்ணாந்து வானத்தைப் பார்க்கையில் ஒரு பெரிய கொட்டாங்கச்சியை பூமிமீது கவிழ்த்து வைத்ததுபோல் தெரிகின்றது. நிலவைப் பார்த்தால் அதற்குள் ஏதோ பிரகாசமான பல்பு எரிவது போலிருக்கின்றது. வெட்டவெளியில் நடந்துக்கொண்டே நிலவைப் பார்க்கையில் அதுவுகம் நம்மை பின்தொடர்ந்து வருவதுபோல் இருக்கின்றது. பாதையில் தூரத்தே தெரியும் நீரின் அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒண்ணுமே இல்லை. அது கானல் நீராம். நீல நிரத்தில் தெரியும் கடல்நீரை கையில் மொண்டு பார்த்தால் அதில் நீலநிறமே இருப்பதில்லை.

நாம் கண்ணால் காணும் காட்சிகள் யாவும் ஒரு நாள் அழியக் கூடியது. இந்த மரம், மலை, நதி, வாய்க்கால், மேகம், பூமி, மனிதன், பறவை, மிருகம் எல்லாமே அழியக்கூடிய வஸ்துக்கள். ஒரு சுனாமி, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு அல்லது பூகம்பம் போதாதா?

ஆனால் நம் கண்ணுக்கே புலப்படாத இறைவன் இருக்கின்றானே, அவனுக்கு அழிவென்பதே கிடையாது. அதனால்தான் அவனை Omniscient, Omnipotent, Omnipresent என்று போற்றுகிறோம். ஆதியும் அவன்தான், அந்தமும் அவன்தான். முதலும் அவனே முடிவும் அவனே.

அதனால்தான் அவன் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. “Heard Melodies Are Sweet But Those Unheard Are Sweeter Still” என்று கூறுவான் ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ்.

நம்முடைய ஞானக்கண்களை திறந்து வைத்த திருப்தியில் நமக்கு புலவர் ஆபிதீன் மீது ஏற்பட்ட அத்தனை கோபமும் நொடியில் காற்றோடு காற்றாக காணமல் கரைந்து போய்விடுகின்றது.

– அப்துல் கையூம்

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் ஹனீபா பாடிய சுதந்திர போராட்ட பாடல்

 

Tags: , , , , , , , , ,

Leave a comment